×

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம்: பாலகிருஷ்ணன் இரங்கல்!!

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் வேதனையளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழப்புகளை தடுக்க சுற்றுலா தளங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேம்படுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், லெமூர் கடற்கரையில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடலில் இறங்கியபோது கடல் அலை இழுத்துச் சென்றதில் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் வேதனையளிக்கிறது.

அதுபோல், கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தயம்பலம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியும், கோடிமுனையில் சென்னையைச் சேர்ந்த 2 பேரும் ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது அழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

கோடை விடுமுறை காலம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருவதால் கடற்கரை மற்றும் அருவி, அணை, ஆறு உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கச் செல்பவர்கள் அதன் அபாயங்களை அறியாமல் உள்ளே இறங்குவதால் எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் அனுமதியின்றி செல்வதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள், அரசு, அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் எச்சரிக்கைகளை மீறாமல் உரிய முறையில் மதித்து நடக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மேலும், தொடர்ச்சியாக விபத்து நடக்கும் கடலோர பகுதிகளை ஆராய்ந்து அவை சுற்றுலா தளமல்ல என்று அறிவிக்க வேண்டுமெனவும், கடற்கரை பகுதிகளில் கூடுதலான கடற்கரை போலீசாரை பணியில் அமர்த்திட வேண்டுமெனவும், சுற்றுலா தளங்களில் உரிய பாதுகாப்பை அதிகரிக்கவும், அபாயகரமான பகுதிகளில் கூடுதலாக காவல்துறையினரை நியமிக்கவும், போதிய எச்சரிக்கை விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பணிகளை அதிகப்படுத்திட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம்: பாலகிருஷ்ணன் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district wave ,Chennai ,Marxist Communist Party ,K. Balakrishnan ,Kanyakumari district ,wave ,Balakrishnan ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...